ஸ்டாலின் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்
சென்னை: கருணாநிதி ஓய்வில் இருப்பது கூட ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என அழைப்பதற்காகத்தான் என்கிற நம்பிக்கை இருக்கிறது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக தமது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
உலகத் தமிழ் மக்களின் சிந்தையெல்லாம் நீக்கமற நிறைந்து-நெஞ்சினில் நித்தமும் இனிக்கும் ஆருயிர்த் தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளில், அவரிடம் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தேன்.
இந்திய அரசியலின் மூத்த தலைவராகவும், தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் சுழல்வதற்கான அச்சாணியாகவும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் திகழும் தலைவர் கருணாநிதியின் வாழ்வும் வளமார்பணியும், தமிழ் மொழிக்கும்-தமிழ் இனத்திற்கும்-தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பெருந்துணையாக இருக்கின்றன.
ஓய்வறியாச் சூரியனாக உழைத்த கருணாநிதி தற்போது ஓய்வில் இருப்பதுகூட, அவரது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வைத் தந்து மீண்டும் அவர், என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று அந்த மந்திரச் சொற்களால், தமது காந்தக் குரலில் நம்மையெல்லாம் அழைப்பதற்காகத்தான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன்.
நம்மைத் தொடர்ந்து வழிநடத்திட, நூறாண்டு கடந்து வாழவேண்டும் என கருணாநிதியை அனைவரும் வாழ்த்திடுவோம்! வணங்கிடுவோம்!
இவ்வாறு ஸ்டாலின் முகநூளில் பதிவிட்டுள்ளார்.