ஹைதராபாத்தில் நடந்த தொழில் அதிபர்கள் மாநாட்டில் பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம்,
தொழிலதிபர் விஜய் மல்லையா போன்று நீங்கள் அனைவரும் கெத்தாக இருக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பி ஓடிவிட்டார்.
இதுவரை அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசால் எதுவும் செய்ய முடியவில்லை.
இதே போன்று நகைகடை உரிமையாளர் நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13500 கோடி ரூபாய் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடி விட்டார் .
அவரையும் இந்தியா கொண்டுவர எதுவும் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த தேசிய பழங்குடி இன தொழில் அதிபர்கள் மாநாட்டில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி ஜூவல் ஓரம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
நாம் தொழில் அதிபர் ஆக வேண்டும். நாம் புத்திசாலி ஆக வேண்டும். நாம் கெத்து காட்ட வேண்டும்.
நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். என்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களை அறிவுறுத்தினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது நீங்கள் எல்லாரும் விஜய் மல்லையாவை விமர்சிக்கிறீர்கள்.
ஆனால் விஜய் மல்லையா என்ன செய்தார்?
அவர் மிடுக்கானவர்.
அவர் புத்திசாலிகள் சிலரை வேலைக்கு அமர்த்தினார்.
அவர் இங்கேயும், அங்கேயும் வங்கிகளிடமும், அரசியல்வாதிகளிடம், அரசாங்கத்திடமும் சில காரியங்களை செய்தார்.
அவர் வங்கி கடன்களை வாங்கினார்.
உங்களை யார் தடுத்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.
அரசு அமைப்பில் ஆதிக்கம் செலுத்தாதீர்கள் என்று ஆதிவாசி மக்களை சொன்னது யார்?
வங்கியாளர்களிடம் செல்வாக்கை காட்டுவதில் இருந்து உங்களை யார் தடுத்தார்கள்?”
என கேள்விகளை அடுக்கி அமைச்சர் விஜய மல்லையாவைப் போன்று நீங்களும் இருங்கள் என கேட்டுக் கொண்டார்.
அவர் இன்று பேசுகையில் வாய் தவறி பேசி விட்டதாக கூறியுள்ளார்.