2016 டிசம்பர் 4-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது தாம் சிகிச்சை அளித்ததாக மருத்துவர் ரமா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் தினந்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக ரமா வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை வார்டில் டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது வார்டிலேயே ஜெயலலிதாவுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு இதய அறுவைச் சிகிச்சை அளித்தபோது மருத்துவர் ரமா உடனிருந்தார்.
ஜெயலலிதாவுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தபோது சசிகலா பதற்றத்துடன் இருந்தார் என மருத்துவர் ரமா கூறியுள்ளார். பதற்றப்பட வேண்டாம் என்று சசிகலாவிடம் தான் கூறியதாக ரமா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் பெரும்பாலான நேரங்களில் சசிகலாவும் உடனிருந்தார். ஜெயலலிதாவை சந்திக்க யார் யார் வந்தனர் என்ற தகவலை விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளேன் என மருத்துவர் ரமா கூறினார்.
முன்னதாக ஜெயலலிதா 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்களே கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை நடத்திய அனைவருமே பல்வேறு தகவலை கூறியுள்ளனர். இந்நிலையில் அதன் உண்மை தன்மையை அறியும் வகையில் ஏற்கனவே விசாரித்தவர்களுக்கு சம்மன் அனுப்பி மீண்டும் மீண்டும் ஆணையம் விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.