இரண்டே நாளில் டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா ; ஆப்கானிஸ்தான் படுதோல்வி!!!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச அரங்கில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் இந்திய அணியிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்தியா ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று (வியாழக்கிழமை) துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 474 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான முரளி விஜய் மற்றும் தவான் இருவரும் சதம் அடித்தார்கள் .
முரளி விஜய் 153 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடிய ஷிகர் தவான் 96 பந்துகளில் 107 ரன்கள் விளாசினார். இதில் மூன்று சிக்ஸர்கள் அடக்கம்.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதையடுத்து தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்குத் திரும்பினர். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் தினேஷ் கார்த்திக்.
லோகேஷ் ராகுல் முதல் இன்னிங்ஸில் 64 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். அணித் தலைவர் ரஹானே 45 பந்துகளைச் சந்தித்து 10 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். டி20 போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளரான ரஷீத் கான் டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் விக்கெட்டை கைப்பற்றி தனது கணக்கைத் துவக்கினார்.
279/2 என வலுவான நிலையில் இருந்த இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழக்கவே ஸ்கோர் 369/7 என்றானது. ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 94 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். 105-வது ஓவரில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் யாமின் அஹ்மத்சாய் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஷீத் கான் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தாலும் அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே 154 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தானின் முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார் தொடக்க வீரர் மொஹம்மத் ஷஷாத். ஹர்திக் பாண்ட்யா ஷஷாத்தை ரன் அவுட் செய்தார். ஆப்கானிஸ்தான் அணியில் எந்த பேட்ஸ்மேனும் இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டு நிலைத்து நின்று ஆடாமல் 27.5 ஓவர்களிலேயே 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது ஆஃப்கானிஸ்தான்.
ரவிச்சந்திரன் அஷ்வின் எட்டு ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜடேஜா, இஷாந்த் ஷர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனிடையே ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அணி ஃபாலோ ஆன் வழங்கியது.
365 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஃப்கானிஸ்தான் தொடர் விக்கெட் சரிவை சந்தித்தது. 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்த ஆஃப்கானிஸ்தான் மேற்கொண்டு 79 ரன்களை மட்டுமே சந்தித்தது.
38.4 ஓவர்களில் 103 ரன்களை மட்டுமே ஆஃப்கானிஸ்தான் எடுத்தது. இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற போட்டிகளில் மிகப்பெரிய வெற்றியாக இப்போட்டி அமைந்தது. இதற்கு முன்னதாக 2007-ல் வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
சர்வதேச அரங்கில் முதல் டெஸ்ட் போட்டியில் மிகக்குறைந்த ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த அணி எனும் பெயரை பெற்றுள்ளது ஆஃப்கானிஸ்தான். இதற்கு முன்னதாக 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடிய வங்கதேசம் 46.3 ஓவர்களில் இன்னிங்ஸை இழந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 27.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸையும் 38.4 ஓவர்களில் இரண்டாவது இன்னிங்ஸையும் இழந்தது குறிப்பிடத்தக்கது .
” நாங்கள் நல்ல அணியாக இருந்தும் எப்படி இவ்வளவு விரைவாக போட்டி நிறைவுற்றது என்பது எங்களுக்கே ஆச்சர்யமளிக்கும் விஷயமாக இருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் வேறொரு வடிவம். எங்களுடைய பலவீனங்களை சரி செய்வதற்கு வேலை செய்வோம்” என போட்டி முடிந்த பிறகு தெரிவித்தார் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஷ்கர்