fbpx
REவிவசாயம்

கால்நடைகளுக்கு அற்புத ஆற்றலை கொடுக்கும் அசோலா வளர்ப்பு!

அசோலா வளர்ப்பும்- அதன் பயன்களும்.

அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை நிறம் அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர்.

இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன.

தேவையான பொருட்கள்:
(6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது)
1. செங்கல் – 30-40 கற்கள்
2. சில்பாலின் பாய் – 2.5 மீ நீளம், 1.5மீ அகலம் (அ) 6’X3’
3. செம்மண் – 30 கிலோ
4. புதிய சாணம் – 30 கிலோ
5. சூப்பர் பாஸ்பேட் – 30 கிராம் (அ)
அசோஃபெர்ட் – 20 கிராம்
6. தண்ணீர் – 10 செ.மீ. உயரம் (சராசரியாக 6-9 குடம்)
7. அசோலா விதை – 300-500 கிராம்
8. யூரியா சாக்கு – தேவையான எண்ணிக்கை (6’X3’ ச.அடியை நிரப்ப)

அசோலா வளர்ப்பு முறை:

இடத்தைத் தயார் செய்தல்:
1. மர நிழலில் (நேரடி சூரிய ஒளி ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது) அவ்வாறு இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
2. இடத்தின் அளவு 6’X3’ இருக்க வேண்டும்.
3. புல் பூண்டுகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
4. இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக்க வேண்டும்.
5. புல் பூண்டுகள் வளருவதை தடுக்க யூரியா சாக்கினை பரப்பவும்.

செய்முறை:
1. செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.
2. அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும்.
3. சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி விட வேண்டும்.
4. தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரும் வரை சுமார் 6-9 குடம் ஊற்ற வேண்டும். ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும்.
5. புதிய சாணம் 2 கிலோ மற்றும் 20 கி அசோஃபெர்ட் (அ) 30 கி சூப்பர் பாஸ்பேட் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
6. 500-1000 கிராம் சுத்தமான அசோலா விதைகளை போட்டு அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.

வளர்ச்சி:
1. விதைத்த 3 நாளில் எடை மூன்று மடங்காக பெருகும்.
2. பசுந்தீவனம் 15 நாளில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.
3. 15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு:
1. தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்க வேண்டும்.
2. தண்ணீன் அளவு 10 செ.மீ. குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
3. 5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 20கிராம் அசோஃபெர்ட் (அ) 10 கிராம் ( ஒரு தீப்பெட்டி அளவு) சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
4. 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.அதற்கு பதிலாக சுத்தமான தண்ணீரை சேர்க்க வேண்டும்.
5. மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான ஜலித்த செம்மண்ணை இட வேண்டும்.
6. 6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றி புதியதாக இட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை:
1.மாடுகளுக்கு  தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.
2. பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.
3. உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.
4. வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.

பயன்கள்:
1. 1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமமான சத்துக்கள் உள்ளது..
2. அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும்.
3. பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்கள் அதிகரிக்கிறது.
4. கோழிக்கும், வாத்திற்கும் ஆடுகளுக்கும் தீவனமாக பயன்படுத்தலாம். அதிக எடை கிடைக்கும்.
5. உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றியின் எடை கூடுவதுடன் இறைச்சி தன்மையும் நன்றாக இருக்கும்.
6. முயல்கள் அசோலாவை விரும்பி உண்ணும்.
7. அசோலா வளர்க்கும் இடத்தில் கொசுத் தொல்லை இருக்காது என்பது ஒரு நல்ல செய்தி..

வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்

  1. தண்ணீர்:
    அசோலாவானது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடும்.
  2. ஈரப்பதம்:
    காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்து விடுகின்றது.
  3. சூரிய ஒளி:
    கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றி விடும்.
  4. காற்று:
    வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
  5. மண்ணின் கார அமிலத் தன்மை:
    காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close