ஆதார் இருந்தால் தான் கட்டிங், ஷேவிங் எல்லாம்…! தமிழக அரசு உத்தரவு!
Aadhar compulsaery in salon

சென்னை:
சலூன் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் 2 மாதங்களுக்கும் மேலாக சலூன் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன.
5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சலூன்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு புதிய உத்தரவை வருவாய் நிர்வாக ஆணையரும், சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான உத்தரவை அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார். அதன்படி, முடிவெட்ட, தாடி ஷேவ் செய்ய வருபவர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலங்கி, துண்டு என ஒருவருக்கு பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்த பிறகே மற்றவருக்கு பயன்படுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சலூன் கடைகள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















