காசை சேகரிக்கும் உண்டியல் இப்போது “சிகரெட் உண்டியல் ” ஆனது ! நம் இளைஞர்களின் புதிய முயற்சி
புகைப்பதால் தனக்கும் கேடு தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு என்று அறிந்தும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் சிகரெட் எனும் தீங்குவிளைவிக்கும் பொருளை உபயோகிக்கிறார்கள்.இதனால் எத்தனை கேடு உள்ளது என்று அறியாமலே இருக்கிறார்கள்.
தற்போது சேலத்தை சேர்ந்த பொறியியல் இளைஞர்கள் குப்பைக்கார குழுவாக உருவெடுத்துள்ளனர். அதாவது சிகரெட் புகைத்து மிஞ்சும் சிறிய பஸ்ட் என்றழைக்கப்படும் பஞ்சு போன்ற துண்டினை சேகரிப்பதாலும் ,அதை மறுசுழற்சிக்கு பயன் படுத்துவதன் மூலம் அதிக அளவில் பலன் உள்ளது என்று கூறுகிறார்கள். அதனால் அவர்கள் ‘சிகரெட் உண்டியலை’ அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
புகைத்து எறியப்படும் சிகரெட்டின் மீதித்துண்டினால் பூமி மாசுபடுவதுடன், அதில் கலந்துள்ள பிளாஸ்டிக் பூமிக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்கிறது. எத்தனையோ ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் சிகரெட் பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்.
சரி , போகட்டும் சிகரெட்டினை முற்றிலுமாக தடுக்கத்தான் முடியவில்லை , அதனால் ஏற்படும் தீங்கினை தடுக்கலாம் என்றுதான் சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த முயற்சில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குப்பைக்கார குழுவை சேர்ந்த அப்துல்கனி கூறியதாவது; சிகரெட்-ல் உள்ள பஞ்சு போன்ற பொருள் மண்ணில் மக்குவதற்கு 3 மாதங்கள் முதல் 10 வருடம் ஆகின்றது. இதேபோல் அதற்கு நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொள்ளும் தண்மையும் உள்ளது.
மேலும் இது வெறும் பஞ்சு கிடையாது இதில் செல்லுலோஸ் அசெட்டேட் எனும் பிளாஸ்டிக் பொருள் உள்ளது இதில் வேறு சில வேதி பொருளை சேர்ப்பதால் பஞ்சினை மட்டும் தனியாக எடுத்து பயன்படுத்தலாம்.மேலும் அதில் இருக்கும் புகையிலை மற்றும் காகிதத்தினை உரமாக பயன்படுத்தலாம் என்று அப்துல்கனி கூறினார்.