fbpx
RETamil Newsவிளையாட்டு

மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் … இந்திய அணி அபார வெற்றி !!!

மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி, புஜாரா (106), விராட் கோலி (82), ரோகித் சர்மா (63) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால், ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

296 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-ம் இன்னிங்சை தொடங்கியது. 3-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. 4-ம் நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்த நிலையில், 8 விக்கெட்டுகளுக்கு 106 ரன்கள் எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கவீரர்கள் பிஞ்ச் (3) மற்றும் ஹாரிஸ் (13) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கவாஜா (33), ஷேன் மார்ஷ் (44), மிச்செல் மார்ஷ் (10), டிராவிஸ் ஹெட் (34) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனையடுத்து, ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. காலையில் மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ரன்னில் ஆல்அவுட் ஆனது.இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close