fbpx
RETamil News

பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை

உரிமம் பெறாமல் விடுதி, காப்பகம் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில், குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு விடுதிகள் நடத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே விடுதி அல்லது காப்பகத்தினை, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க வேண்டும். ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டிடம் அமைக்க வேண்டும்.

பெண்கள் விடுதியாக இருப்பின் அதன் காப்பாளராக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளரும், 24 மணி நேரமும் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருப்பின் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். 50-க்கும் மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களின் வாயில்களில் சிசிடிவி கேமரா, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் பொருத்த வேண்டும். விடுதிக்காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். விடுதியில் உள்ள பாதுகாவலர்கள் அவசர காரணம் ஏதுமின்றி விடுதிக் கட்டடங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து அத்தாட்சி பெற்ற பின்னரே விடுதிகளை இயக்க வேண்டும். விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவுச்சான்று, உரிமம் பெற வேண்டும்.
விடுதி நடத்துவோர் தீயணைப்புத்துறை, காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளிடம் உரிய உரிமம் பெற வேண்டும். பதிவின்றி இயங்கும் விடுதிகள் குறித்து 9444841072 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்.

விடுதிகளை நடத்துவதற்கான உரிமங்களைப் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்து கொள்ள வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெறாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close