மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விடுதி காப்பாளர் புனிதா புகாரை ஒப்புக்கொண்டார்!
கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதை விடுதி காப்பாளர் புனிதா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற தனியார் விடுதி உரிமையாளருக்கு உடந்தையாக இருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த விடுதி காப்பாளர் புனிதா கடந்த 1ஆம் தேதி கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை இரண்டு நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க பீளமேடு காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இன்று இரண்டு நாள் காவல் முடிந்த நிலையில் காவல்துறையினர் புனிதாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த இரண்டு நாள் விசாரணையின் போது விடுதி உரிமையாளர் பாலியல் அத்துமீறலுக்கு தான் உடந்தையாக இருந்ததை போலீஸ் காவலில் புனிதா ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இதை பணத்திற்காக தான் செய்ததாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 23ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது அன்றைய தினத்தில் இருந்து சுமார் எட்டு நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார் புனிதா.
கடந்த 23ஆம் தேதி விடுதி உரிமையாளரின் பிறந்தநாள் என்று சொல்லி மாணவிகளை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று இருக்கிறார் புனிதா.
அங்கு தான் விடுதி உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்று இருக்கிறார். இவை அனைத்தும் சிசிடீவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.