மல்லையா மீதான கடன் மோசடி விவகாரம்…லண்டன் கோர்ட் இன்று தீர்ப்பு!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார். அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கில், லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பு கூற உள்ளது.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்று பல அமைப்புகளும் அவர் மீது விசாரணை நடத்தி வழக்குகள் போட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்தது. மேலும், இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. லண்டன் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக இந்திய புலனாய்வு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், லண்டன் நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பை வெளியிட உள்ளது. இதில் மல்லையா நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிந்துவிடும்.
இன்றய தீர்ப்பில் அவர் நாடு கடத்தப்படுவது உறுதியானால் இந்திய போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார். சிறை பயத்தில் இருக்கும் விஜய் மல்லையா வங்கிகளில் தான் கடன் வாங்கிய முழு தொகையையும் செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், கடனுக்கான வட்டியை செலுத்த அவர் முன் வரவில்லை. இதனால் வங்கிகள் அதை பெற்றுக் கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை.
இன்று லண்டன் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இக்குழுவுக்கு சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமை வகித்து சென்றுள்ளார்.















