மத்திய மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் – மு க ஸ்டாலின்
பொய்யர்களின் கூடாரமாக மத்திய, மாநில அரசுகள் விளங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து, மக்கள் விழிப்புணர்வு என்ற அமைப்பைச் சேர்ந்த ஹக்கீம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் தரவில்லை என ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ள தகவல் நேற்று வெளியானது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
தமிழகத்தில் #AIIMS அமைய மத்திய அரசு 2000 கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்க வேண்டுமென்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள்!
ஆனால், RTI தகவல் இவையனைத்தும் பொய் என்பதை உறுதிபடுத்தியுள்ளது! பொய்யர்களின் கூடாரம் மத்திய மாநில அரசு! என குற்றம்சாட்டியுள்ளார்.