பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மாணவன் பலி
செஞ்சியில் உள்ள ராசா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. கட்டிட பணிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் நீர் சேகரிக்கப்பட்டுள்ளது.
10 அடி ஆழமுள்ள தொட்டியில் ஆறரை அடி நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால் இன்று காலை பள்ளிக்கு சென்ற மேல் அருகங்காணத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் சிவராமன் என்ற மாணவன் மலம் கழித்துவிட்டு கால் கழுவுவதற்காக தொட்டிக்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியில் விழுந்து சிறுவன் நீச்சல் தெரியாமல் திணறி உள்ளார். காப்பாற்றுவதற்கு யாரும் இல்லாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக சிவராமன் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதனிடையே மாணவன் உயிரிழப்பிற்கு பள்ளி நிர்வாகமும் கட்டிட ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நீர் தேக்கி வைத்திருந்த கழிவுநீர் தொட்டியை மூடி வைத்திருந்தால் உயிர் இழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.