பட்டாசு கடைகள் அமைக்கும் பணி மும்முரம் – தீவுத்திடலில் அமைக்கப்பட உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை மக்களின் வசதியை கணக்கில் வைத்து காமராஜ் சாலை தீவு திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருவது வழக்கம்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ,இங்கு மிகவும் பாதுகாப்போடு பட்டாசு கடைகள் போட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதனால் வரும் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெற உள்ளது. இதற்காக 70 கடைகள் அமைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பதை தடை செய்யப்பட்டுள்ளதால் , கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசுகள் விற்பனை அதிக அளவில் இருக்கும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தியாகராய நகர் மற்றும் பாரிமுனை ஆகிய இடங்களில் விதிகளை மீறி பட்டாசு கடைகள் போடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.