தி.மு.க.வின் சார்பாக எம்.எல்.எ. மற்றும் எம்.பி-க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவர்-தி.மு.க தலைவர் அறிவிப்பு
கேரளா, வரலாறு காணாத மழையால் நிலைகுலைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள மக்களின் சீரமைப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கேரள மக்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கேரள மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிகரம் நீட்டும் வகையில் திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.