தண்ணீர் லாரி மோதி பலியானவர்களின் எண்ணிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவடி நகராட்சிக்குட்பட்ட பருத்திபட்டு ஆகிய கிராமங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொன்னம்பேடு கிராம பொதுநலச்சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரின் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது சென்னை அண்ணாசாலையில் தண்ணீர் லாரி மோதி தாய், மகன் பலியானது குறித்து வேதனை தெரிவித்தனர்.
பின்னர் இதுபோன்ற தண்ணீர் லாரி மோதி பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறைகளை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரத்தில் அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.