சென்னை சிறுமி பாலியல் குற்றவாளிகள் 17 பேரையும் தூக்கிலிட வேண்டும்
தங்களது 12 வயது மகளை பாலியலுக்கு பயன்படுத்திய 17 பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை லிப்ட் ஆபரேட்டர், மின் ஊழியர், பிளம்பர் உள்ளிட்டவர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் நாடுதழுவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் யாரையும் சந்திக்காமல் மவுனம் காத்து வந்தனர்.
இதனிடையில் சிறுமியின் அக்கா மற்றும் பெற்றோர் அளித்த பேட்டி பரபரப்பாக வெளியாகி உள்ளது.
அதில் லிப்ட் ஆபரேட்டர் ரவிகுமார் முதல் முறையாக சிறுமியை வினோதமான முறையில் தொட்டு பாலியலை ஆரம்பித்து இருக்கிறார்.
சிறுமியின் தந்தை மற்றும் சகோதரி கூறுகையில், கடுமையான உடல் வலி இருக்கிறது என கூறியதால், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
மேலும் கைதான 17 பேரையும் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கூறினர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் எஸ்.அனந்தநாராயணன் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை பணிய வைத்துள்ளனர்.
இதனிடையே சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக கீழ்பாக்கம் மருத்துவமனையை சேர்ந்த 6 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதுடன் இயல்புநிலைக்கு திரும்பும் வரை ஆலோசனைகளையும் வழங்குவார்கள் என்று கீழ்பாக்கம் மருத்துவமனையின் அதிகாரி தெரிவித்தார்.