கடையில் பொருட்களை திருடிய பெண் காவலர் …தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் மீது அடியாட்கள் வைத்து சரமாரி தாக்குதல்
சென்னை எழும்பூர் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் சீருடையுடன் வந்த பெண் காவலர் திருடியதை தட்டிக்கேட்டதால் அவரது கணவர் அடியாட்களுடன் வந்து கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழும்பூர் மேயர் ராமநாதன் தெருவில் உள்ள நீல்கிரீஸ் கடைக்கு பிற்பகலில் சீருடையுடன் வந்த பெண் காவலர் ஒருவர் பொருட்கள் வாங்குவது போல சுற்றித்திரிந்துள்ளார்.
இவர் சாக்லேட் உட்பட பல வகைப் பொருட்களை தன் சீருடையில் எடுத்து போட்டுக் கொள்ளும் காட்சிகள் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
சிசிடிவி கேமராவை கண்காணித்த கடை உரிமையாளர் பிரணவ் இதுகுறித்து ஊழியர்களை எச்சரித்துள்ளார்.
இதை அடுத்து அவர்கள் பெண் காவலரை மறித்து கேட்டபொழுது காவலர் தான் திருடவில்லை என மறுத்துள்ளார்.
இதையடுத்து ஊழியர்கள் அவரை சோதனையிட்டபோது அவர் திருடியது உறுதிப்படுத்தப்பட்டது.
வேறுவழியின்றி தவறை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துவிட்டு பெண் காவலர் அங்கிருந்து சென்றார்.
இந்நிலையில் பெண் காவலரின் கணவர் என்று கூறிக்கொண்டு சில ஆட்களுடன் வந்த ஒரு நபர் “போலீஸ் என தெரிந்தும் எப்படி சோதனை நடத்தலாம்” என மிரட்டியமிரட்டியதாகவும் பெண் ஊழியர்களை ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் அங்குள்ள ஆண் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
நடப்பதை சிசிடிவியில் பார்த்துவிட்டு அங்கு வந்த கடை உரிமையாளர் பிராணவையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
தாக்குதலில் முகம் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த கடை உரிமையாளர் ப்ரணாவும், ஊழியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.