தூத்துக்குடி துப்பாக்கி சூடு ; மறுப்பு தெரிவிக்கும் ஏட்டு ராஜா!!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். துப்பாக்கிச்சூட்டின் போது காவல்துறை வேன் ஒன்றின் மேல் நின்றபடி போலீஸ் சீருடை அணியாத நபர் துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் வீடியோ காட்சி சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது.
மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டது யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் போலீஸ் ஏட்டு ராஜா என்றும் செய்திகள் உலா வந்தது.
இந்நிலையில் அவரது ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறியதாவது:
போலீசாருக்கு உணவு விநியோகம் செய்யும் பொறுப்பாளராக இருந்தேன். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கலவரம் நடந்த கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு வந்த உத்தரவையடுத்து வேனில் சென்று அலுவலக பின்புறமாக பாதுகாப்புக்காக நின்றிருந்தேன்.
எதிரே மக்கள் கூட்டம் அதிகமாக திரண்டு வந்த நிலையில் வேன் மீது ஏறி நின்று எச்சரிக்கை செய்யவே துப்பாக்கியால் சுட்டு விட்டு வேனில் இருந்து கீழே இறங்கிவிட்டேன். ஆனால் அதற்கு முன்பாகவே யாரோ மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நான் யாரையும் சுடவில்லை. என் மீது சமூக வலைதளங்களில் வேண்டும் என்றே தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது குறிபார்த்து சுடும் அளவுக்கு குறிவைத்து சுடும் இவர் கூறும் கூற்றை மக்கள் நம்பத்தயாராக இல்லை என்பது நிதர்சனமான உண்மை.