நியூயார்க்: மஹாராஷ்டிர மாநிலம், புனேயைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால், 82, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, தன் கை விரல் நகங்களை, நேற்று ஒருவழியாக வெட்டினார்.
கடந்த, 1952 முதல், 66 ஆண்டுகளாக, புனேயைச் சேர்ந்த, ஸ்ரீதர் சில்லால், தன் இடது கை விரல் நகங்களை வெட்டாமலே வளர்த்து வந்தார்.
தற்போது, அவற்றின் மொத்த நீளம், 909 செ.மீ., இதில், கட்டை விரல் நகம் மட்டும், 197.8 செ.மீ., வளர்ந்திருந்தது.
கடந்த, 2016ல், நீண்ட விரல் நகங்களுக்காக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், சில்லாலின் பெயர் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வயோதிகத்தின் காரணமாக, உலக சாதனை படைத்த தன் விரல் நகங்களை, அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க, சில்லால் விரும்பினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியம், சில்லாலின் நகங்களை பாதுகாக்க முன் வந்தது.
இதையடுத்து, நேற்று நியூயார்க் சென்ற சில்லால், தன் நகங்களை வெட்டினார்.