பைக் திருட்டு குறித்து புகாரளிக்கும் டிஜிகாப் செயலியை அறிமுகம் செய்தது – தமிழக காவல்துறை

இரு சக்கர வாகனங்கள் தொடர்பாக புகார் அளிக்க மற்றும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கு உதவும் டிஜிகாப் என்கின்ற கைப்பேசிக்கான செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்துவைத்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் , கைப்பேசிக்கான டிஜிகாப் செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விஜய் சேதுபதி கலந்துகொண்டார்.
டிஜிகாப் செயலியை அறிமுகம் செய்து காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது; தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று கொண்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் கண்காணிப்பு கேமரா பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கான திட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா , ‘ நீயா நானா’ கோபிநாத் , மருத்துவர் சாந்த, மருத்துவர் கமலா செல்வராஜ், ஐசரி கணேஷ் ஆகியோருடன் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.
இந்த டிஜிகாப் செயலியை கொண்டு செல்போன், மற்றும் பைக் திருட்டை தவிர்க்க முடியும். பழைய மொபைல் மற்றும் பைக் வாங்கும் போது அது திருட்டு பொருளா என்பதை கண்டறிய இந்த டிஜிகாப் செயலி உதவும் என்று காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்த விஜய் சேதுபதி பேசியதாவது; இவ்வாறு பொதுமக்களின் முக்கிய பிரச்சனை குறித்து காவல்துறை எடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. மேலும் காவல்நிலையங்களில் குப்பையாக வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றியதும் பாராட்டத்தக்கது என்று கூறினார்.















