fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் கனவு பலிக்காது – கர்நாடக முதல்வர் குமாரசாமி !

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்து விடவேண்டும் என பாஜக முயற்சி செய்து வருகிறது. எவ்வளவு அதிகமான அழுத்தத்தை கொடுத்தாலும், எங்களை ஒன்னும் செய்ய முடியாது என கர்நாடகா முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, “ஆபரேஷன் தாமரை” என்ற பெயரில் பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக ஆளும் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணிக்கு, சபாநாயகரை தவிர்த்து 116 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.

104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்.எம்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கான தீவிர வேலைகளில் பாஜகவினர் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சில அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எம்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைய போவதாகவும், அதனால் இந்த 3 எம்எல்ஏ-க்களும் மும்பை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கர்நாடக துணை முதலமைச்சரான ஜி.பரமேஸ்வரா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பரமேஸ்வரா கூறும்போது,

அரசு கவிழும் என பாஜகவினர் தொடர்ந்து கூறிக்கொண்டேயிருந்தாலும், அது ஒருபோதும் நடக்காது என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் குறித்து வெளியான செய்தி உண்மை இல்லை. அந்த மூன்று பேரும் சொந்த காரணங்களுக்காக மும்பை சென்றிருக்கலாம் எனக் கூறினார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலையில் அதுகுறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் சார்பில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களை சந்தித்ததாகவும் பரமேஸ்வரா கூறினார்.

இது குறித்து கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி கூறும்போது ,

மும்பை சென்றுள்ள 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் என்னிடம் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மும்பைச் செல்வதற்கு முன் என்னிடம் சொல்லிவிட்டுதான் சென்றார்கள். அரசுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை. பாரதீய ஜனதா யாரை தொடர்பு கொள்கிறது, என்ன தருவதாக சொல்கிறார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும். எங்கள் கூட்டணி ஆட்சி தொடரும். இந்த அரசாங்கத்தை எப்படி வழிநடத்தி செல்வது என்பது எனக்கு தெரியும். இதற்கு ஊடகங்கள் கவலைப்பட வேண்டாம் என கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close