fbpx
Tamil News

திருமுருகன் காந்தி புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மற்றம்.!!

மே 17 என்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்தும், சென்னை-சேலம், பசுமை வழிச்சாலை திட்டம் குறித்தும் பேசினார்.

திருமுருகன் காந்தியின் இந்த பேச்சு முகநூலில் வீடியோ மூலமாக வெளியாகியது. சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் இந்த விடியோவை அடிப்படை ஆதாரமாக கொண்டு திருமுருகன் காந்தியை கைது செய்தனர். அவர் மீது தேச விரோத செயலில் ஈடுபட்டதாக இரு வழக்குகளை பதிவு செய்தனர்.

திருமுருகன் காந்தியை கைது செய்வதற்காக போலீசார் அவரை தேடி வந்தனர். மேலும் தேடப்படுவோர் பட்டியலில் அவர் இருப்பதாகவும், விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு பயணம் முடித்து விமானம் மூலமாக பெங்களூர் விமான நிலையம் வந்தடைந்தார் , திருமுருகன் காந்தி. பெங்களூர் போலீசார், வியாழக்கிழமை அவரை கைது செய்து சென்னை சைபர் குற்றப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார், கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை சைதாப்பேட்டை 11-வது நீதித்துறை மன்றத்தில்   வெள்ளிக்கிழமை அன்று ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நிதித்துறை,  திருமுருகன் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இல்லை எனக்கூறி, அவரை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் மறுத்து விட்டார்.

சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் கோரிக்கையின்  படி, சைதாப்பேட்டை நீதித்துறை நடுவர் 24 மணிநேரம் போலீஸ் விசாரணைக்கு அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போலீசார், திருமுருகன் காந்தி அரசுக்கு எதிராக பேசினார் எனவும், ராயப்பேட்டையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதியின்றி, பேரணி நடத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டார் என வெள்ளிக்கிழமை இரவு அறிக்கையினை வெளியிட்டனர். இந்நிலையில் அவர் கைது  செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை வேலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர்.

 

Related Articles

Back to top button
Close
Close