மதுக்கடைகள் திறப்பை ஏற்கவே முடியாது…! விளாசிய பாமக ராமதாஸ்
PMK ramadoss condemns tasman open

சென்னை: மதுக்கடைகள் திறப்பு என்பதை ஏற்கவே முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வரும் 7ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்; இது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவாகும்.
ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இதுவரை 40 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், மது கிடைக்காததால் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாகி, அது இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட, இப்போது மதுவை மறந்து விட்டு புதிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இது மிகப்பெரிய, ஆக்கப்பூர்வமான மாற்றம் ஆகும்.
இதை பயன்படுத்தி தமிழகத்தை மது இல்லாத திசையில் பயணிக்க வைக்க வேண்டிய தருணத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறந்திருப்பது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாகும். இந்த தவறான முடிவால் கடந்த 6 வாரங்களாக விளைந்த நன்மைகள் அனைத்தும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது ஊரடங்கு நடைமுறைக்கு வந்த முதல் நாளே மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்காக தமிழக அரசு கூறியுள்ள காரணம் சற்றும் ஏற்க முடியாதது.
தமிழக எல்லைகளில் உள்ளவர்கள் மது அருந்துவதற்காக அண்டை மாநிலங்களுக்கு செல்வதால் அதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த காரணமே தமிழக அரசின் தோல்வியாக பார்க்கப்படக் கூடும்.
அதுமட்டுமின்றி, மதுவிலக்கு என்ற கோரிக்கை எழும் போதெல்லாம், ‘‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு இருக்கிறது’’ என்ற பழைய வசனத்தைக் கூறியே கடந்த கால ஆட்சியாளர்கள் மதுவிலக்கை மறுத்து வந்துள்ளனர். அதே காரணத்தை இப்போதைய அரசும் கூறுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.















