பேரறிவாளன் விடுதலையில் ராகுல் காந்திக்கு ஆட்சேபனை இல்லை – பா.ரஞ்சித்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளனை விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
ரஞ்சித்தின் படங்கள் குறித்து தனது நண்பர்கள் மூலம் அறிந்த ராகுல் காந்தி அவரை சந்திக்க அழைப்பு விடுத்தார்.
அதனை ஏற்று திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். இதுகுறித்து ரஞ்சித்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் பேரறிவாளனை பற்றி ராகுலுடன் பேசியதாக கூறினார்.
பேரறிவாளன் விடுதலையில் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பா.ரஞ்சித் தெரிவித்தார்.
ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.
அதில் அரசியல், சினிமா, சாதி மத பாகுபாடு, அரசியல் சட்டத்தின் மதசார்பின்மைக்கு வரும் மிரட்டல்கள் குறித்து விவாதித்ததாக இயக்குனர் ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.
மாறுபட்ட சித்தாந்தங்களை கொண்டவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி ஆட்சேபனை இல்லை என கூறியதால் தனது மகனை விடுவிக்குமாறு பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கு கைதி பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க முடியாது என சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.