fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

முகிலன் காணாமல் போன விவகாரம்: சிபிசிஐடி அறிக்கை தாக்கல்!

சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது,

நடத்தப்பட்ட தூப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை, சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆதாரங்களை வெளியிட்டார்.

இதையடுத்து, அன்றிரவு (பிப்ரவரி 15) சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் ரயிலில் முகிலன் பயணம் மேற்கொண்டார்.

பிப்ரவரி 16-ஆம் தேதி மதுரையை சென்று அடைந்திருக்க வேண்டிய முகிலன் மதுரையை சென்றடையவில்லை.

மேலும், ஒலக்கூர் ரயில் நிலையம் வரை தொடர்பு எல்லைக்குள் இருந்த அவரது செல்லிடப்பேசியை அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

எனவே, முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோரைக் கொண்டஅமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், மாயமான முகிலனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முகிலன் குறித்த விசாரணையில், அவரது குடும்ப உறுப்பினர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட 251 பேரிடம் விசாரணை இதுவரை நடத்தப்பட்டுள்ளது.

அவர் மாயமான தினத்தன்று, எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

முகிலனை கண்டுபிடிக்க, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக, ஒரு பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த பெண்ணுக்கும் முகிலனுக்கும் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதுதொடர்பாகவும் விசாரிக்கப்படுவதாகவும், சரியான கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

விசாரணையைக் காண, முகிலனின் மனைவி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close