லட்சத்தில் போகும் கொரோனா தொற்று…! எம்ஜிஆர் பல்கலை. அதிர்ச்சி ஆய்வு!
MGR University research about tamilnadu corona

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 2.70 லட்சமாக அதிகரிக்கும், சென்னையில் கொரோனா அக்டோபரில் உச்சநிலையை அடையும் என்று எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும்?, எத்தனை பேருக்கு தொற்று பரவும்? போன்றவை குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதில், சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு, கொரோனா உச்ச நிலையை அடையும் வேகத்தை 2 அல்லது 3 வாரங்களுக்கு வேண்டுமானால் குறைக்கலாம்.
ஆனால், அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் உச்சநிலையை எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஜூலை மாதம் மத்தியில் தமிழகத்தில் 2.70 லட்சம் மக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும், 60 சதவீத தொற்று சென்னையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் மாத இறுதியில் சென்னையில் மட்டும் 71 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருக்கும் என்றும், இந்த எண்ணிக்கை ஜூலை 15-ந் தேதியளவில் 1.5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பும் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மத்தியில் சென்னையில் 1,654 இறப்புகளும், தமிழகம் முழுவதும் பலி எண்ணிக்கை 3,072 ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
















