
திருவாரூர் மாவட்டம் கருப்பூரில் கெயில் நிறுவனத்திற்கு சொந்தமான குழாய்கள் விளை நிலங்களில் பதிக்க தயாராக இருந்த நிலையில் குழாய்களை தீ வைக்கபட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர், நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பல இடங்களில் எதிர்ப்புகளும் வலுத்தபடியே இருக்கிறது.

இந்த நிலையில் திருவாரூர் பகுதியை சுற்றிலும் ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய், மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் இடங்களுக்கு குழாய்கள் பதிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கருப்பூரில் விளை நிலங்களில் குழாய் பதிப்பு பணிகளை நடத்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் குழாய் பதிப்பதற்காக 20 எண்ணெய் குழாய்களை கருப்பூரில் போட்டு வைத்திருந்தது.
அந்த குழாய்களை பதிப்பதற்காக இன்று காலை தொழிலாளளர்கள் அந்த வயல் வெளிப்பகுதிக்கு வந்து பார்த்தபோது அந்தக் குழாய்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன. குழாய்கள் கருகிக் கிடந்ததுடன், வயல்களிலும் தீ பரவி எரிந்திருந்தது. இது குறித்து கெயில் நிறுவன மேற்பார்வையாளர் சீனிவாசன் திருவாரூர் தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்















