6 வடமாநில கொள்ளையர்கள் கோவையில் கைது
சமீபகாலமாக வடஇந்திய கொள்ளையர்களின் ஊடுருவல் தமிழகத்தில் அதிகமாக உள்ளது.
குழந்தை திருட்டு, வழிப்பறி கொள்ளை என அவ்வப்போது வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டே உள்ளது. இதனால் தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே கோவையில் வீடுபுகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் மாதவன்(52). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று உள்ளார். பின்னர், மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் திருடு போயுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், கொள்ளையர்கள் பீளமேடு பகுதியில் இருப்பது தெரியவந்தது.
அப்பகுதியில், பதுங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சோட்டா லால்(43), ராஜ்குமார்(25), ராம்பிரசாத்(27), பாபுலால்(25), சன்னி(25), கிஷன்லால்(42) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த 6 வட மாநில கொள்ளையர்களும் விசாரணையில் கூறியதாக போலீஸார் கூறியதாவது, ராஜஸ்தானில், அவர்களுடைய ஊரில் சரியாக வேலை கிடைக்காததால் தமிழ்நாட்டில் கொள்ளையடித்து பணம் சம்பாதிப்பதற்காக ரெயில் மூலம் கோவை வந்துள்ளனர்.
பின்னர் கோவை ரெயில் நிலையம், வ.உ.சி. பூங்கா, பீளமேடு ஆகிய பகுதிகளில் இரவுநேரத்தில் தங்கியுள்ளனர்.
அவர்கள் பகல் நேரங்களில் கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பலூன் விற்பனை செய்வது மற்றும் தெருத்தெருவாக சென்று பலூன் விற்பது போல பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.
பின்னர், வீடு புகுந்து திருடுவதற்கு முன்பாக அந்த தெருவில் 3 இடங்களில் அவர்களுடைய ஆட்களை நிறுத்திவைத்துவிட்டு, பின்னர், வீட்டின் பூட்டை உடைத்து அவர்களில் 2 பேர் உள்ளே புகுந்து பணம், நகையை திருடி உள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த கொள்ளையர்கள் கோவையில் பல வீடுகளில் புகுந்து அதிக அளவில் பணம், நகையை திருடிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.
இந்த 6 பேரும் திருடிய பணத்தில் ரூ.10 ஆயிரத்தை குடித்து செலவழித்துள்ளனர். அதற்குள் அவர்கள் அனைவரும் போலீஸாரின் பிடியில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களிடம் மீதம் இருந்த ரூ.50 ஆயிரம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.