18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல்கல் வெளியாகியுள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை எம்எல்ஏக்கள் அனைவரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க டிடிவி தினகரன் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் செந்தில்பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவாக கவர்னரிடம் மனு அளித்தனர்.
இதனால் அரசு கொறடா புகாரின்பேரில் சபாநாயகர் தனபால் இந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி உத்தரவிட்டார்.சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, எம்எல்ஏக்கள் நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கில் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.
வழக்கு மூன்றாவது நீதிபதியான எம்.சத்தியநாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்த வழக்கை ஜூலை 23ம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
விரைவாக விசாரணை நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.விசாரணை, முடிந்து ஒரு மாதம் முடிந்துள்ளதால், தீர்ப்பு எப்போது வெளியாகும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நீதிபதி விடுமுறையில் செல்வதாலும் உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை காரணமாகவும் அக்டோபர் 22ம் தேதிக்கு பிறகே தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்னும் இரண்டே நாட்களில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும் வரை குற்றாலத்தில் தங்கியிருக்க ஆதரவாளர்களுக்கு தினகரன் அறிவுறுத்தி உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.