fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு…! புகார் அளித்தவர்கள் பதிலளிக்க பேரவை செயலாளர் கடிதம்!

11 admk mla case in supreme court

சென்னை:

11 எம்எல்ஏக்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாபா பாண்டியராஜன்  உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்எல்ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில், 11 உறுப்பினர்களை தகுதி நீக்கம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என்றோ அறிவுறுத்தவோ முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்து, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும் அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும் கூறி வழக்கை முடித்து வைத்தது.

இந் நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு  சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என்று கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார். அப்போதைய எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன்,பார்த்திபன், எஸ்.ராஜா, முருகுமாறன் பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதி உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close