fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் !

கஜா புயல் சேத விவரங்களைத் தெரிவிப்பதற்காக, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 30 நிமிடம் நடந்த இந்தச் சந்திப்பில், 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் கேட்டுள்ளார்.

கஜா புயல், கடந்த 16-ம் தேதி நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. எட்டு மாவட்டங்களில் கடும் சேதத்தை கஜா புயல் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. புயல் முடிந்து 6 நாள்களாகியும் அதிலிருந்து அந்த மக்களால் மீண்டு வர முடியவில்லை. தொண்டு நிறுவனங்கள், தனி மனிதர்கள், அரசாங்கத்தின் உதவிகள் தொடர்ந்து அனுப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையே, புயல் சேதங்களை நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். மொத்தம் இரண்டு மாவட்டங்களைப் பார்வையிட்டார் முதல்வர்.

இன்று காலை 9.45 மணியளவில் பிரதமரின் இல்லத்தில் மோடியைச் சந்தித்த முதல்வர், 30 நிமிடம் பேசினார். கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைத்தார். புயல் சேதம் தொடர்பான முதற்கட்ட ஆய்வு அறிக்கையையும் முதல்வர் சமர்ப்பித்துள்ளார். புயல் பாதிப்பை ஆய்வுசெய்ய மத்தியக்குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியும், இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடியும் பிரதமரிடம் முதல்வர் கேட்கப்பட்டதாகவும், வர்தா, ஒகி புயல் நிவாரணத்தொகையில் உள்ள நிலுவையையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, புயல் சேத அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, மத்திய படைகளை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் உடனான சந்திப்பை நிறைவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கஜா புயல் சேதங்கள் குறித்த அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன். மத்தியக்குழுவை அனுப்பி சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர், விரைவில் மத்தியக்குழுவை அனுப்புவதாக கூறினார். புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

முதற்கட்டமாக ரூ.1500 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதங்கள் குறைந்துள்ளது. புயல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாலை மார்க்கமாக சென்றால் முழுவதுமாக பார்க்க முடியாது என்பதால் ஹெலிகாப்டரில் சென்றோம். கடந்த காலங்களில் விட தற்போது சேதம் அதிகமாக இருக்கிறது.” என்று கூறினார்.

புயல் பாதித்த பகுதிகளை பிரதமரோ, மத்திய அமைச்சரோ பார்வையிடவில்லை என்ற கேள்விக்கு, “தமிழக அரசு செய்த பணிகளை நான் கூறுகின்றேன். மத்திய அரசு செய்துள்ளதை அவர்களிடம் கேளுங்கள்” என்று முதல்வர் பதிலளித்தார்.

Related Articles

Back to top button
Close
Close