பதவி, பணத்தாசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம்… இப்போதே விலகி விடுங்கள்… ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது. 30-40 ஆண்டுகளாக மன்றத்தில் இருப்பது மட்டுமே பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ தகுதி ஆகி விட முடியாது. மக்கள் ஆதரவு இல்லாமல் நாம் அரசியலில் நினைத்ததை சாதிக்க முடியாது.
நிர்வாகிகள் நியமனம், நீக்கம் என அனைத்து நடவடிக்கைகளும் எனது பார்வைக்கு வருகிறது. நிர்வாகிகள் நீக்கம் தொடர்பாக எனது கவனத்திற்கு தகவல் வருவதில்லை என்பது தவறானது. பதவி, பணத்தாசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம் என்று கூறியது வெறும் பேச்சிற்காக அல்ல.
மற்றவர்களைப் போலவே அரசியல் செய்வதற்கு நாம் ஏன் புதிதாக அரசியலுக்கு வர வேண்டும். தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறோம்.
மன்றப்பணிகளுக்கு செலவு செய்யுமாறு நான் யாரையும் கூறவில்லை. மன்றத்தினருக்கு நான் கொடுத்த வேலையும், பணம் செலவழித்து செய்ய வேண்டிய வேலை இல்லை. மன்றத்திற்கு நான் பணம் செலவு செய்துள்ளேன் என்றால் அதனை என்னால் ஏற்க முடியாது.
அரசியலில் பதவி சுகத்துக்கும், பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன். பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என கூறி உள்ளார்.