ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று மருந்தகங்கள் அடைப்பு !
ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 28-ஆம் தேதி ஆன்லைன் மருந்து வணிகத்தை ஊக்குவிக்கும் விதமாக வரைவு அறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கே.செல்வன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்:
“மருந்துகள் ஆன்லைன் விற்பனைக்கு வரக்கூடாது. ஆன்லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது ஆகும். டாக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்கவேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆன்லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும்.
ஆன்லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.
ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதி அளிக்க இருக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து அகில இந்திய அளவில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தை இன்று நடத்துகிறோம். இந்தியா முழுவதும் 8 லட்சம் கடைகள் அடைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் இருக்கின்றன. இதில் மருத்துவமனைக்குள் உள்ள 5 ஆயிரம் கடைகளை தவிர, மீதம் உள்ள 30 ஆயிரம் கடைகளும் அடைக்கப்பட்டு தான் இருக்கும்.மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெறும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.