ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை !!!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அணியின் சார்பில் தினகரன் போட்டியிட்டார். தினகரன் அணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அனைத்து அமைச்சர்களும் ஆர்.கே.நகரில் முற்றுகையிட்டு தேர்தல் பணியாற்றினர். ஒரு வாக்காளருக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்குத் தரப்பட்ட பணத்தின் பட்டியலின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆவணம், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதுகுறித்து தற்போது வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரூ. 89 கோடிக்கு பணப்பட்டுவாடா நடந்தது என நாங்கள் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை.

வருமான வரித்துறை சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்கள் மிகவும் ரகசியமானவை. சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் கைப்பற்றப்பட்ட எந்த ஆவணங்களையும் வெளியிடவில்லை.
சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை இதுவரை வெளியிட்டதில்லை, இனியும் வெளியிட மாட்டோம் என பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.















