fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மதுரையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரதிதேவியை, அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகில் உள்ள சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரதிதேவி. பட்டதாரி ஆசிரியரான இவர், திருமங்கலத்தில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

திருமணமாகி இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், கணவர் குரு முனீஸ்வரன் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பத் தகராறு காரணமாக ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு ரதிதேவியின் வீட்டிற்கு சென்ற குரு முனீஸ்வரன், சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். ஆனால் ரதிதேவி வர மறுத்துள்ளார்.

அந்த ஆத்திரத்தில் நேற்று பிற்பகல், பள்ளிக்கு சென்ற குருமுனீஸ்வரன், மனைவியிடம் வீட்டு சாவி வாங்க வேண்டும் என கூறி பள்ளிக்குள் சென்றுள்ளார்.

பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத வகையில் வகுப்பறைக்குள் நுழைந்த குரு முனீஸ்வரன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரதி தேவியை கண்மூடித்தனமாக குத்தினார்.

இதில், 8-ஆம் வகுப்பு ஆசிரியை ரதிதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், முனீஸ்வரனைக் கைது செய்தனர்.

இந்நிலையில் ரதிதேவியின் தந்தை சந்திரன், முனீஸ்வரன் குடும்பத்தினர் மீது போலீஸில் புகார் அளித்தார்.

அதில், முனீஸ்வரனின் தந்தை சுப்ரமணி அவரது தாய்- பஞ்சவர்ணம், மூத்த சகோதரி திருச்செல்வி அவரது கணவர் சிவராஜ் இளைய சகோதரி தனலெட்சுமி அவரது கணவர் செல்வமணி ஆகியோரின் தூண்டுதல் காரணமாகவே தனது மகள் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் குரு முனீஸ்வரன் உள்ளிட்ட 7 பேர் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close