ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் “ஸ்டெர்லைட் ஆலை” யால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி ஆலைக்கு எதிராக பொது மக்கள் நீண்ட நாளாக போராட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மிகப்பெரிய அளவில் நடந்த 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.
வன்முறையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குழுமம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமைத் தீர்ப்பாயமும் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதை எதிர்த்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவை நியமித்தது. நிபுணர் குழுவினர் தூத்துக்குடி வந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தனர்.
நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் ஆய்வு நடத்தினர். பின்னர் தூத்துக்குடியிலும், சென்னையிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நிபுணர் குழு தனது அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த பிறகும் தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது என நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய பெஞ்சில் வேதாந்தா எதிர் புகார் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து விசாரணைகளும் வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், வேதாந்தா மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால தடை விதித்ததுடன், வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலையை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படும் அதேவேளையில் ஆலையை மூட உத்தரவிட்ட அரசாணை செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரமில்லை என அதிரடியாக கூறினர். இதனால் தூத்துக்குடி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முன்னதாக தீர்ப்பையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.















