fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

விழாக் காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்குச்சாவடிகள் இருக்கும்.வாக்களிக்க மக்கள் இருக்க மாட்டார்கள்” ! நீதிபதிகள் கருத்து

மதுரையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 18-ம் தேதி மதுரை சித்திரை திருவிழாவின் உச்சகட்டமான மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டமும், அதே நாளில் அழகர் எதிர்சேவையும் நடைபெறுவதால் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.

 

மதுரை சித்திரை திருவிழாவின் உச்சகட்டமாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துக்கு மறுநாள் ஏப்ரல் 18ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தொடங்கும் தேரோட்டம் 4 மாசி வீதிகள் சுற்றி மீண்டும் நிலைக்கு வருவதற்கு பகல் 12 மணி வரை ஆகும். இதில் பல லட்சம் மக்கள் திரள்வார்கள். அதோடு இதே ஏப்ரல் 18ல் அழகர் எதிர்சேவையும் நடக்கிறது.

இந்த உற்சவம் அன்று அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து விடிய விடிய நடைபெற்று ஏப்ரல் 19-ல் காலை அழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம் நடைபெறும்.அழகர் எதிர்சேவை மற்றும் ஆற்றில் இறங்குவதை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து வருவார்கள். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். பாதுகாப்புக்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படுவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை என திருவிழா சமயத்தில் மதுரையில் மக்களவைத் தேர்தலை நடத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோயில் திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. மேலும், மதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளது.

இதனை கேட்ட நீதிபதிகள், மதுரையில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை ஏன் மாற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மதுரை சித்திரைத் திருவிழா பற்றி தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு கூறாதது ஏன் ? என்றும் சித்திரைத் திருவிழா பற்றி தென் மாவட்ட அமைச்சர்களுக்குத் தெரியாத என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பல லட்சம் பேர் கூடும் கோயில் திருவிழாவை கவனத்தில் கொள்ளாமல் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவை நடத்த முடிவெடுத்தது எப்படி? விழாக் காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்குச்சாவடிகள் இருக்கும். வாக்களிக்க மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறினர்.

மேலும் கடமைக்காக தேர்தலை நடத்துகிறதா தேர்தல் ஆணையம்? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஆணையம் பின்வாங்குகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.

இது குறித்து தலைமை அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் நாளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close