fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!

முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும்,திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ வுமான கருணாஸ் 2019 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினார்.

கருணாஸ் செப்டம்பர் 16-ந் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், ஆளும் அதிமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார். இதற்காக அவர் மீது கைது நடவடிக்கைகளும் பாய்ந்தது.

மேலும் சபாநாயகர் அவரது எம்.எல்.ஏ பதவியையும் நீக்க நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து ஆளும் அரசை கடுமையாக விமர்சித்தார் கருணாஸ்.

அண்மையில், சபாநாயகருக்கு எதிராக கருணாஸ் சார்பில் சட்டப்பேரவைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், சட்டமன்ற விதி 69-ன்படி அவரை நீக்க வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் தனபால், ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், திருவாடானை எம்.எல்.ஏ திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன் என்றார். தொடர்ந்து அவரிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்தது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

என்னுடைய தொகுதி மக்களின் பிரச்னைகளுக்காக முதல்வரை சந்தித்தேன். தொகுதியில் கண்மாய்கள் தூர் வாரப்படாமல் உள்ளன. திருவாடனை தொகுதியில் குடிநீர் பிரச்னை மற்றும் கன்மாய்களைத் தூர் வாருவது தொடர்பாக கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளேன்.

சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரிக்கை விடுத்தேன் என்றார். மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close