சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 ஹோட்டல்களில் 3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை!

சென்னையில் சரவண பவன் குழுமம் உட்பட பிரபல 4 ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகபடியான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, சரவண பவன், ஹாட் பிரட்ஸ், அஞ்சப்பர் குழுமம் மற்றும் கிராண்ட் ஸ்வீட்ஸ் குழுமம் உள்ளிட்ட பிரபல 4 ஹோட்டல்களின் அலுவலகங்கள் உட்பட 32 இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், இந்த ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது. வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 3-ஆம் தேதி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக இந்த ஹோட்டல்கள் பெரும் அளவிவல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீவிர விசாரணைக்கு பின்பே மதிப்பீடு குறித்த விவரங்கள் தெரியவரும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்ட சரவண பவன், அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் அதன் கிளைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















