fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு !

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களையும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்த தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வழக்கு நிலுவையை காரணம் காட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளை தவிர 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும், வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட 3 தொகுதிகளில் தேர்தல் நடத்த இயலாது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்காததில் உள்நோக்கம் உள்ளதாகவும், இது தொடர்பாக தி.மு.க. குழுவினர் தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்துவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். எனவே திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தி.மு.க. குழுவினர் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 18 தொகுதிகளோடு அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரத்தில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான வழக்கை வரும் 15-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close