fbpx
RETamil News

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம்… விஷமருந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கர்ப்பிணிக்கு எச் ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் விஷமருந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகி இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த நவம்பர் 30-ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். ஆனால், அவரது ரத்தத்தை பரிசோதிக்காமல் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் ரத்தம் எடுத்து, சேமித்து வைத்துள்ளனர். பரிசோதிக்காத இந்த ரத்தம், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டது.

இந்நிலையில், ரமேஷ் தான் வெளிநாடு செல்வதற்காக, கடந்த 6-ந் தேதி மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதில், ரமேஷுக்கு எச்ஐவி தொற்று கிருமிகள் இருப்பது தெரியவந்தது. உடனே, ரமேஷ் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று தனக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாகவும், தான் அளித்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் அதற்குள் எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தியதால் மனமுடைந்த ரமேஷ் கடந்த வியாழக்கிழமை விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் சிவகாசி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close