fbpx
Tamil News

உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு!

உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாளான இன்று ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவரது பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அறிவித்தது. முன்னதாக, குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு 2013-ம் ஆண்டில் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.

இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிலையை அமைக்க நாடு முழுவதிலும் இருந்து இரும்பு திரட்டப்பட்டது. நர்மதை ஆற்றங்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை உயரத்தை விட இருமடங்கு உயரம் கொண்டது.

பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கின.

நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து சென்றன. பின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, மி-17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மூலம் படேல் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன.

Related Articles

Back to top button
Close
Close