பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
1983-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் நோக்கம்:
1. கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குவதற்காகவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
2. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்றனர்.
தமிழக அரசு, 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படுகிறது.
இதை பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி திட்டத்தினை தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.















