fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் சேர்வதற்க்கு நாளை முதல் ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய அளவில் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியிருந்த நிலையில், அவர்களில் 7.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நளின் காந்தேல்வால் 701 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.

தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் பேர் தேர்வெழுதியிருந்தனர். அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் இம்முறை 48.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவர்கள் எவரும் வராதது ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் மாணவி சுருதி, தேசிய அளவில் 57-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ள அவர் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண் பெற்றுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 3150 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழை இணைத்து, மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close