விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சுவையான பூரணம் கொழுக்கட்டை !
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 1 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணை
தண்ணீர் 1 1/2 கப்
பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை 1 கப்
வறுத்த எள் 1 கப்
ஏலக்காய் 3
சுத்தமான வெள்ளம் 2 கப்
துருவிய தேங்காய் 1/2 மூடி
நெய்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1/2 ஸ்பூன் உப்பு மற்றும் நல்லெண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து கொண்டு அடுப்பினில் வைத்து சூடு செய்ய வேண்டும். அரிசி மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.அதனுள் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவு மிருதுவாகும் வரை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பச்சரிசி மாவு தயார் செய்யும் முறை:
தரமான பச்சரிசி வாங்கி கொள்ள வேண்டும். அதனை 2 அல்லது அதற்கு மேல் நன்றாக தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதனை 2 மணிநேரம் நன்றாக ஊறவைத்து கொள்ளவேண்டும். தண்ணீர் இல்லாமல் எடுத்து ஒரு சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் அரிசியை பரப்பி 1/2 மணிநேரம் உலர வைக்க வேண்டும். லேசான ஈரப்பதம் இருந்தாலும் பரவாயில்லை. அதனை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
இப்பொழுது பூரணம் செய்வது எப்படி என்று பார்ப்போம்:
நன்றாக வருத்து தோல் நீக்கிய வேர்க்கடலை 1 கப் எடுத்து கொள்வோம். லேசான தீயில் வாணலியை வைத்து எள்ளை போட்டு அது பொரியும் வரை வறுக்க வேண்டும். இரண்டினையும் மிக்சியில் போட்டு உடைத்து கொள்ளவேண்டும். அதனுடன் ஏலக்காய் மற்றும் சுத்தமான வெல்லத்தையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்த அரிசி மாவினை ஒரே அளவில் உருண்டை பிடித்து கொள்ளவும். ஒரு கப்பில் நெய் எடுத்துக் கொள்ளவும். அதனை கையில் தடவி உருண்டை பிடித்த மாவை எடுத்து அதை கையில் பரப்பி பூரணம் வைத்து மூடவும். இட்லி பாத்திரத்தை அடுப்பினில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். ஆவி வந்ததும் இட்லி தட்டின் மீது துணி விரித்து அதன் மீது பூரண உருண்டையை வைக்கவும். 20-30 நிமிடம் நன்றாக வெந்ததும் இறக்கி விடவேண்டும்.
சுவையான பூரணம் கொழுக்கட்டை தயார்! நன்றாக ருசித்து மகிழலாம்!