fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்; மீறினால் அபராதம் – தமிழக அரசு அறிவிப்பு !

பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறினால் அபராதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இதற்கான அறிவிப்பை, உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், “ஜனவரி 1-ந் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக” அறிவித்தார். இதற்கான அரசாணை ஜூலை 16-ந் தேதி வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையில், “பால் மற்றும் பால் பொருட் களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கு, அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் ‘பேக்’ செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவு புத்தாண்டு தினமான நாளை அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அரசின் தடை உத்தரவை மீறி, கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் மீதும் இந்த நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளுக்கான நொறுக்குத் தீனிகள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் 2022-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில், 2019-ம் ஆண்டு தொடக்கம் (நாளை) முதலே தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றை பறிமுதல் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மண்டல அளவில், மண்டல அலுவலர், செயற்பொறியாளர், மண்டல சுகாதார அலுவலர், உதவி வருவாய் அலுவலர், வட்டாட்சியர், உதவி காவல் ஆணையாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோட்ட அளவில், உதவி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் வரி வசூலிப்பவர் ஆகியோரை கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close