fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து எனும் தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது – மு.க.ஸ்டாலின்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 28-ந் தேதி என்று அறிவித்திருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைய இருந்தது. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகள் இன்னும் முடியாததால் இந்த இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இடைத்தேர்தல் பணிகளை உடனே நிறுத்தும்படி தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்றத்தில், காலியாக உள்ள மொத்தம் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனிமைப்படுத்தி இடைத்தேர்தல் நடத்துவதில், சூட்சுமமான உள்நோக்கம் இருக்கலாம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன். மேலும் திருவாரூரில் கஜா புயல் தொடர்பான நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது, நிவாரணப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களின் அதிருப்தியும் கோபமும் அதிகமாகி வாக்களிப்பதற்கு எதிரான மனநிலை உருவாகிவிடும்; அப்படிப்பட்ட மனநிலை ஜனநாயகத்தை நிச்சயம் செழுமைப்படுத்தாது.

தேர்தலில் வெற்றி பெறுவது என்பதை விட கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கு உரிமையான நிவாரணப் பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து.

பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து, “மினி சட்டமன்றத் தேர்தல்” என்று சொல்லுமளவுக்கு காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close