முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருப்பது…..!
சிதம்பரத்தில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு மண்டபம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும். அதற்கு விசிக உறுதுணையாக இருக்கும். தமிழர்கள் ஓரணியில் திரள்வோம்.2026ல் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைப்போம். திமுக கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4ல் ஒரு வாக்கு விசிக உடையதாக இருக்கும். 100 வாக்குகளில் 25 வாக்குகள் விசிக வாக்குகளாக இருக்கும் என்று தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திருமாவளவன் பேசிய இந்த பேச்சு மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திருமாவளவன் அறிவிப்பு ஏனென்றால் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து விசிகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் திருமாவளவன் தொடர்ச்சியாக திமுக கூட்டணியில் தான் விசிக தொடரும், தொடர்கிறது என்பதை அறிவித்தார். அதேபோல் பாஜக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகள் இருக்கும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இருக்காது என்றும் அறிவித்துவிட்டார். ஆரம்பித்து வைத்த திருமாவளவன் இதனிடையே திமுக கூட்டணியில் இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விசிக முயற்சிக்கும் என்று முதல்முறையாக பேசியதும் திருமாவளவன் தான். அதன்பின்னரே சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கூடுதல் தொகுதியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஒரே குரலில் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் சிதம்பரத்தில் நடந்த கூட்டத்தில் வைத்து திருமாவளவன், திமுக கூட்டணிக்கு விழும் 100 வாக்குகளில் 25 வாக்குகள் விசிக உடையதாக இருக்கும். 4 ல் ஒரு பங்கு வாக்குகள் விசிக உடையதாக இருக்கும் என்று ஸ்டாலின் முன்னிலையில் பேசி இருக்கிறார். இதன் மூலமாக விடுதலை சிறுத்தனைகளின் வளர்ச்சியையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் திருமாவளவன் மறைமுகமாக கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல் லோக்சபா தேர்தலில் 2ல் போட்டியிட்டு 2லும் பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்றது. இதன் மூலமாக விசிக மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனால் இம்முறை விசிக பானை சின்னத்தில் போட்டியிடவே விரும்பும். அதனால் திமுக கூட்டணி சார்பாக எத்தனை தொகுதிகளில் விசிக பெறும் என்பதே எதிர்பார்ப்பதாக உள்ளது. விசிக, சிபிஐ, சிபிஎம், கொமதேக, மதிமுக, ஐயூஎம்எல், தவாக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில், இம்முறை மக்கள் நீதி மய்யமும் இணைந்திருக்கிறது. இத்தனை கட்சிகளிடமும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..