பிரபல இந்தி நடிகர் காதர்கான் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்

பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் காதர்கான். இவர் கடந்த 1973 -ஆவது வருடம் ராஜேஷ் கன்னாவின் டாக் ( Daag) எனும் படத்தில் அறிமுகமானார். அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன் 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆவார். 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி உள்ளார். மேலும் இவர் வில்லன், காமெடியன், குணசித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்து இந்தி திரைப்பட உலகில் புகழ் பெற்றவர். ஆப்கானிஸ்தானில் காபூலில் பிறந்த இவர் தனது 81-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

காதர்கான் தற்போது கனடாவில் வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 16 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாக வதந்தி வந்த நிலையில் அதனை அவர் மகனும் இந்தி நடிகருமான சர்ப்ராஸ் கான் மறுத்தார்.
நேற்று இரவு கனடா நேரப்படி 6.00 மணிக்கு காதர்கான் இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியது. இதனை உறுதி செய்த அவர் மகன் சர்ப்ராஸ் கான், அவரது இறுதி சடங்குகள் கனடாவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
காதர்கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தனது அசாத்திய நடிப்புத்திறமை மற்றும் தனித்துவமான நகைச்சுவை உணர்வு மூலம் திரையை பிரகாசமாக்கினார். அவர் ஆக்கப்பூர்வமான கதாசிரியராகவும் விளங்கினார். மறக்க முடியாத பல படங்களில் அவரது பங்களிப்பு இருந்தது. அவரது இறப்பு செய்தியை கேட்டு வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல நடிகர் காதர்கான் ஜி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். காதர்கானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.















